ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீனாவின் கய் யான்யானுடன் மோதினார். சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே சாய்னா நேவால், கய் யான்யானிடம் தோல்வி அடைந்தார். இதனால், இன்றைய போட்டியில் அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதத்தில் விளையாடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 30 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால் 13-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 2012 ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தற்போது மோசமான ஃபார்மில் உள்ளார்.
குறிப்பாக, நடப்பு சீசனில் அவர் பங்கேற்ற கடைசி தொடர்களில் ஐந்து முறை முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறுதியாக, பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிவரை முன்னேறினார் என்பது நினைவுகூரத்தக்கது.