நேபாளில் அன்னபூர்னா சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் மாளவிகா பன்சோத், காயத்திரி கோபிசந்த் புல்லேலா ஆகியோர் முன்னேறினர். இதில் காயத்திரி இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்த் புல்லேலாவின் மகள் ஆவார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மாளவிகா முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாளவிகா, அந்த செட்டையும் 21-18 என கைப்பற்றினார். வெறும் 41 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில் மாளவிகா நேர் செட்களில் காயத்திரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
இது மாளவிகா தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது சர்வதேச பட்டமாகும். முன்னதாக தான் கலந்துகொண்ட முதல் சர்வதேச தொடரான மாலத்தீவு சர்வதேச தொடரில் மாளவிகா பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாளவிகா மற்றும் காயத்திரி ஆகிய இரண்டு வீராங்கனைகளும் உள்ளூர் தொடரில் பலமுறை மோதியுள்ளனர். அவர்கள் இருவரும் பலமுறை ஜூனியர் தொடர்களில் களம் கண்டுள்ளனர். முன்னதாக மாளவிகா, கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஜூனியர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கான தகுதிச் சுற்றிலும், கடந்தாண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறையும் என மொத்தம் மூன்று முறை காயத்திரியை வீழ்த்தினார்.
தனது முதல் இரண்டு சர்வதேச தொடரிலேயே பட்டம் வென்ற மாளவிகா பன்சோத் வரும் காலங்களில் இந்திய பேட்மிண்டனில் தனக்கென ஒரு முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #KoreaOpen2019: கொரிய ஓபன் பட்டத்தை வென்ற உலக சாம்பியன் கென்டா மொமோடா!