பெதுவாக, ஒவ்வொரு மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றிக்கிழமையைதான் உலக அன்னையர் தினமாக கொண்டாடுவோம். ஆனால், இங்கு ஒரு வீராங்கனை சற்று வித்தியாசமாக நேற்று (25.8.2019) அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார். நாம் பெரும்பாலும் அன்னையர் தினத்தன்று அன்னை தொடர்பான பாடல்களை ஸ்டேட்டஸ்களாக பதிவு செய்து கொண்டாடுவோம்.
ஆனால், மேல்குறிப்பிட்ட அந்த வீராங்கனை இதற்கு நேர்மாறாக தங்கப் பதக்கத்தை தனது தாய்க்கு அர்ப்பணித்து அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார். அதேசமயம், அந்த வீராங்கனையை தங்கமங்கையாக நாடே கொண்டாடியது. அந்த தங்கமங்கை வேறு யாரும் இல்லை பி.வி.சிந்துதான்.
இந்தியாவில் மட்டுமல்ல அவர் உலகின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாகவும் திகழ்கிறார். ஆனாலும் இவரால் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்ததே தவிர நீண்ட ஆண்டுகளாக தங்கப்பதக்கத்தை மட்டும் வெல்ல முடியவில்லை.
இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இவர், ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம், 42 ஆண்டுகால வரலாற்றில் இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
இதையடுத்து, போட்டி முடிந்தபின் சிந்து பேசியாதவது, ''நான் இந்தத் தங்கப் பதக்கத்தை எனது அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனெனில், இன்று அவருக்கு பிறந்தநாள்'' என தெரிவித்தார்.
தனது பிறந்தநாள் அன்று தங்கம் வென்று தன்னை மட்டுமல்லாது நாட்டிற்கே பெருமை சேர்த்த சிந்துவை நினைத்து அவரது தாயார் விஜயா ஆனந்தக் கண்ணீர் வடித்தார். உண்மையில் சிந்துவின் இந்த வெற்றிதான் அவரது தாயாருக்கு கிடைத்த சிறந்த அன்னையர் தினப் பரிசு. இனி வரும் ஒவ்வொரு ஆண்டின் ஆகஸ்ட் 25ஆம் நாளைத்தான் சிந்து அன்னையர் தினமாக கொண்டாடுவார். அதேபோல், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம் வென்றுத் தந்ததற்காக நாடும் அன்றைய தினம் அவரை கொண்டாடும்.
இங்கு பாடல்களை ஸ்டேட்டஸ்களாகவும், அவர்களது புகைப்படத்தை பதிவு செய்வது மட்டும் அன்னையர் தினமல்ல. அவர்களை உச்சிக் குளிர வைக்கும் வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் உண்மையான அன்னையர் தினம் என சிந்து அனைவருக்கும் எடுத்துரைத்துள்ளார்.