ஹைதராபாத் : இறகுப் பந்தாட்ட நட்சத்திரம் பிவி சிந்து இன்று தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். புசார்லா வெங்கட சிந்து என்பதன் சுருக்கமே பிவி சிந்து ஆகும்.
இவர் பிவி ரமணா, விஜயா தம்பதியருக்கு மகளாக 1995ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்தார். இவரின் தந்தை பிவி ரமணா, தாயார் விஜயா இருவரும் கைப்பந்து (வாலி பால்) ஆட்ட வீரர்கள் ஆவார்கள்.
ஆகையால் சிந்துவுக்கு இளமையிலேயே விளையாட்டில் கடும் ஆர்வம் இருந்தது. அதைப் புரிந்துகொண்ட அவரது தந்தை, இறகுப் பந்தாட்ட பயிற்சி அளித்தார்.
போட்டியின் பெயர்தான் இறகுப் பந்தாட்டம். ஆனால் இறகு பந்தாட்டம் ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு டென்னிஸ் போன்று வேகமும், கவனமும் வேண்டும்.
இந்த இரண்டும் இயற்கையிலேயே காணப்படும் பிவி சிந்து, ஆட்டக் களத்தில் எதிராளிக்கு சிம்ம சொப்பனமாக விளங்க தவறுவதில்லை. இது மட்டுமா? பி.வி. சிந்து சத்தமில்லாமல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஹைதராபாத் கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்ற பிவி சிந்து, இன்று பலருக்கும் முன்னுதாரணமாக மாறியது அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை.
பல தோல்விகள் அவமானங்களை கடந்தே இந்த நிலைக்கு வந்துள்ளார். இவரின் வாழ்வில்2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற இறகுப்பந்தாட்ட போட்டி திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அந்தப் போட்டியில் உலகின் இரண்டாம் இடம் வகித்த சீன வீராங்கனை வாங்யிகாவையும், ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றினார்.
தொடர்ந்து வெள்ளியும் வென்றார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் 21-19 என்ற கணக்கில் வென்று கரோலினா மர்லினுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த வகையில் பி.வி. சிந்துவிடம் சில சாதனைகள் உள்ளன.
- 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.
- உலக தரவரிசையில் முதல் 20 இடங்கள் பிடித்த இந்தியர்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.
- இளவயதில் (18) அர்ஜூனா விருது வென்றவர்.
- 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இறகு பந்தாட்ட போட்டிகளில் இரண்டு தங்கமும், ஒரு வெண்கலமும் வென்றுள்ளார்.
- பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
பிவி சிந்து விளையாட்டு தவிர சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
விளையாட்டில் பி.வி. சிந்துவின் பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு அர்ஜூனா (2013), ராஜிவ் காந்தி கேல் ரத்னா (2016), பத்ம ஸ்ரீ (2015) மற்றும் பத்ம பூஷண் (2020) உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
இதையும் படிங்க : மேகா நாயகன் அஸ்வின்!