5வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், அவாதே வாரியர்ஸ் (லக்னோ), ஹைதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், புனே 7 ஏசஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டியையொட்டி வீரர், வீராங்கனைகளின் ஏலம் டெல்லியில் நடைபெற்றது. ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் ரூ.2 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் ரூ.77 லட்சத்திற்கு மேல் யார் மீதும் முதலீடு செய்ய முடியாது. ஒவ்வொரு அணியிலும் 9 முதல் 11 பேர் வரை இடம் பெறலாம்.
154 பேர் இடம் பெற்ற ஏலப்பட்டியலில் இருந்து அதிகபட்சமாக, உலக சாம்பியனான பி.வி. சிந்துவை ரூ.77 லட்சத்திற்கு ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணி ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொண்டது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூயிங்கை ரூ.77 லட்சத்திற்கு நடப்பு சாம்பியன் பெங்களூரூ ராப்டர்ஸ் அணி எடுத்துள்ளது.
உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத்தை, ரூ.32 லட்சத்திற்கு பெங்களூரு அணி தக்க வைத்தது. இதே போல், தேசிய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் கோபிசந்தின் மகளான காயத்ரியை ரூ.2 லட்சத்திற்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த சீசனிலிருந்து விலகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கும்மி பாட்டுக்கு நடனமாடிய பி.வி. சிந்து