1970, 80களில் பேட்மிண்டன் போட்டிகளில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்தவர் இந்தியாவின் பிரகாஷ் படுகோனே. இந்திய பேட்மிண்டன் வரலாற்றை பிரகாஷ் படுகோனேவிற்கு முன், பிரகாஷ் படுகோனேவிற்கு பின் என்று எழுத வேண்டும். அந்த அளவிற்கு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்துள்ளார்.
ரசிகர்களால் ஜென்டில் டைகர் என அழைக்கப்படும் அவருக்கும் இந்தியாவுக்கும் இன்றைய நாள் (மார்ச் 23) மறக்க முடியாத நாளாகும். ஏனெனில், இந்தியாவில் பேட்மிண்டன் போட்டியின் வரலாறு இந்த நாளிலிருந்து எழுதப்பட்டது. 1980, மார்ச் 23 அன்று லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இதில், பிரகாஷ் படுகோனே இந்தோனேஷியாவைச் சேர்ந்த லியம் ஸ்வி கிங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். பிரகாஷ் படுகோனே தனது ஆட்டத்தில் உச்சத்தில் இருந்த காலம் அது. இதனால் இப்போட்டியில் அவர் 15-3, 15-10 என்ற நேர் செட் கணக்கில் லியம் ஸ்வி கிங்கை லாவகமாக வீழ்த்தி, ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனை படைத்தார். இச்சாதனை படைக்கும் போது அவருக்கு வயது 24 மட்டுமே.
அதன்பின் அவரது பாதையில் பயணித்த புலேலா கோபிசந்த் 2001இல் ஆல் இங்கிலாந்து ஓபன் பட்டத்தை வென்றார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவுக்கு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கமும், ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் பிரகாஷ் படுகோனே ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுதான் இந்திய பேட்மிண்டன் வரலாற்றை மாற்றியமைத்த சாதனையாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அதுவரை பேட்மிண்டன் போட்டியின் பக்கம் கவனம் செலுத்தாத இந்தியர்களை அந்த விளையாட்டின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்ததே இப்போட்டிதான்.

பேட்மிண்டன் போட்டியில் அவர் இந்த மேஜிக்கை நிகழ்த்தி இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தற்போது பேட்மிண்டனில் சிறந்த நட்சத்திரங்களாக வலம்வரும் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி. சிந்து, கிதாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் பிரகாஷ் படுகோனே கட்டமைத்த பாதையைதான் பின்பற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!