'இந்திய பேட்மிண்டன் விளையாட்டின் தந்தை' என்ற புகழுக்கு சொந்தக்காரர் பிரகாஷ் படுகோனே. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1980ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது தான். அந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இந்தியா சார்பில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரகாஷ் படைத்தார்.
அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றும் இந்தியாவின் புகழை உயர்த்தியவர். மேலும், 1981ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக்கோப்பை பேட்மிண்டன் தொடரிலும் தங்கம் வென்று அசத்தினார்.
அதேபோல் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்று, அத்தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்தார்.
இதன் காரணமாகவே பிரகாஷ் படுகோனேவை இந்திய பேட்மிண்டனின் தந்தை என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் சர்வதேச பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெற்றதும், 1992ஆம் ஆண்டு பெங்களூருவில் பிரகாஷ் படுகோனே அகாடமியை தொடங்கி, கோபிசந்த், பொன்னப்பா, அபர்ணா போபாத், அனுப் ஸ்ரீதர், லக்ஷயா சென் உள்ளிட்ட பல சர்வதேச பேட்மிண்டன் வீரர்களை உருவாக்கிய பெருமையும் பிரகாஷ் படுகோனேவையே சாரும்.
இந்நிலையில், இவர் இன்று தனது 65ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், இவரது பிறந்தநாளுக்கு இந்திய பேட்மிண்டன் சம்மேளனம், பேட்மிண்டன் நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.