இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து பிற விளையாட்டுகளிலும் இதுபோன்ற தொடர்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரானது பின்னர் 2016 முதல் பிரீமியர் பேட்மிண்டன் தொடர் என்ற பெயரில் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே இந்த பிரீமியர் பேட்மிண்டன் தொடரின் அடுத்த சீசன் ஜனவரி 20ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது நகரங்களை மையமாக வைத்து மொத்தம் ஒன்பது அணிகள் இதில் களமிறங்குகின்றன.
இந்தாண்டுக்கான போட்டிகள் மொத்தம் நான்கு நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பெங்களூருவில் உள்ள கண்டிவீரா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்கும் பெங்களூரு ரேப்டர்ஸ் அணி நிர்வாகம், பெங்களூரு கண்டிவீரா மைதானத்தில் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த முடியாது என்பதை பேட்மிண்டன் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோரிடம் ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளில் பெங்களூரு பேட்மிண்டன் ரசிகர்களுக்கான சிறந்த நகரம் என்றும் பி.வி.சிந்து, தாய் ஷூ போன்ற சிறந்த வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளை காண முடியாதது வருத்தமளிப்பதாகவும் பதிவிட்டிருந்தனர்.
மேலும், இந்த விஷயத்தில் தலையிட்டு பெங்களூருவில் போட்டிகளை நடத்துமாறு கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: மலேசியன் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் தோல்வியடைந்த சாய்னா, சிந்து