மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில், இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லோங்குடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில், ஸ்ரீகாந்த் 18-21 என்ற கணக்கில் சென் லோங்கிடம் வீழ்ந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டில் இவ்விரு வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இறுதியில் 19-21 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
இதன் மூலம், கிதாம்பி ஸ்ரீகாந்த் இப்போட்டியில் 18-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் சென் லோங்கிடம் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சுங் ஜி ஹியுனிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.