நடப்பு ஆண்டுக்கான சீன ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் சீனாவின் ஃபுஷோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வியுற்றதால் இந்திய நட்சத்திர வீரர்களும் வீராங்கனைகளும் வெளியேறினர்.
இருப்பினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்திய இணையான சாத்விக்சாய் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ச்சியாக வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடி எடுத்து வைத்தனர். காலிறுதிப்போட்டியில் சீனாவின் லி ஜுன் ஹுய், லியு யு சென் ஆகிய இணையை இந்திய இணை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை இந்திய இணை 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. அதேபோன்று இரண்டாம் செட் ஆட்டத்திலும் இரண்டு ஜோடிகளும் சமமான திறனை வெளிப்படுத்தியதால் இப்போட்டியில் 15-15 என்ற சமநிலை ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் சாத்விக்சாய் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை எதிரணியின் தவறுகளை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். இறுதியில் அந்த செட்டை அவர்கள் 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி வெற்றிபெற்றனர்.
இதன்மூலம் சீன இணையை 21-19, 21-15 என வீழ்த்திய இந்திய இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அவர்கள் இருவரும் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் மார்க்கஸ் பெர்னால்டி கிடியோன், கெவின் சஞ்சய்யா சுகமுல்ஜோ ஆகியோரை எதிர்கொள்கின்றனர்.
இந்திய இணை சாத்விக்சாய் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர். கடந்த மாதம் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் தொடரிலும் இந்த இணை இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.