பேட்மிண்டன் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பட்டியலில், 12ஆவது இடத்திலிருந்து இந்திய வீரர் சாய் பிரனீத் தற்போது ஒரு இடம் முன்னேறி 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது பேட்மிண்டன் வாழ்க்கையில், அவர் முதல்முறையாக 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சமீப நாட்களாக சாய் பிரனீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
இதையும் படிங்க: 36 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இரண்டாவது இந்தியர்
குறிப்பாக, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அவர் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தார். அண்மையில் நடந்து முடிந்த டென்மார்க் ஓபன் தொடரிலும், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லின் டானை வீழ்த்தினார். இப்பட்டியலில், ஒன்பதாவது இடத்திலிருந்து இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் தற்போது 11ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜப்பான் வீரர் கென்டா மொமோடா தொடர்ந்து முதலிடத்திலும், சீன வீரர் ஷி யூ கி இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தொடர்நது ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். மறுமுனையில், எட்டாவது இடத்திலிருந்து இந்தியாவின் சாய்னா நேவால் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சீன, கொரிய, டென்மார்க் ஓபன் தொடர்களின் முதல் சுற்றிலிருந்தே சாய்னா நேவால் வெளியேறியதால்தான் தரவரிசைப் பட்டியலில் சரிவடைந்துள்ளார்.