சீன ஓபன் சூப்பர்750 பேட்மிண்டன் போட்டித் தொடர் சீனாவின் ஃபுஷோ நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்யைர் பிரிவில் விளையாடிய இந்திய நட்சத்திர வீராங்கனைகள் பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் முதல் சுற்றுப்போட்டிகளிலேயே தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப்போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் பாருப்பள்ளி காஷ்யப், சாய் பிரனீத் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர். இதனிடையே இன்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் பாருப்பள்ளி காஷ்யப் (25ஆவது ரேங்க்), டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்செனை (6ஆவது ரேங்க்) எதிர்கொண்டார்.
இப்போட்டியில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் 21-13, 21-19 என பாருப்பள்ளி காஷ்யப்பை எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 43 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்தத் தோல்வியால் பாருப்பள்ளி தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். இவர் சாய்னா நேவாலின் கணவர்.
முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய ஓபன் தொடரில் ஆக்சல்செனிடம் தோற்றிருந்த பாருப்பள்ளி தற்போது இரண்டாவது முறையாக அவரிடம் வீழ்ந்துள்ளார்.
சீன ஓபனில் இன்று நடைபெறும் மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் 11ஆவது நிலை வீரரான சாய் பிரனீத், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்ளவுள்ளார். அதே போன்று ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சாத்விக்சாய் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் ஜப்பான் இணையை எதிர்கொள்கின்றனர்.
மேலும் படிக்க: இந்தியா - வங்கதேசம் பகலிரவு டெஸ்ட்: வேகமாக விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்