ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர் மலைச்சாமி. இவர் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பங்கேற்று விநோதமான மனுக்களை அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் கடந்த சில வாரங்களாக ஆட்சியரிடம் அளித்த மனுவில், தான் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி பிறந்ததாகவும் தனக்கு 16 வயது ஆகிறது என்று சான்றிதழ் வழங்குமாறும் கோரியிருந்தார்.
அதுமட்டுமன்றி நாட்டில் உள்ள தீமைகளை அழித்து குற்றச் செயல்களைத் தடுத்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக உருவத்தை மாற்றிக்கொண்டு முதியவர் அவதாரம் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த முதியவர் இம்முறை அளித்த மனு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. ஏனெனில் அவர் அந்த மனுவில், இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை தூக்கி வந்து திருமணம் செய்வேன் என அதில் குறிப்பட்டிருந்தார்.
முதியவரின் இந்த மனுவை பார்த்த மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் என அனைவரும் திகைத்தனர். இது தற்பொழுது மிகப்பெரிய அளவில் வைரல் செய்தியாக மாறியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அந்த முதியவர் வாரம் தோறும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விநோதமான மனுக்களை எடுத்து வந்து என்னிடம் கொடுப்பார். பல முறை தனக்கு 16 வயதுதான் ஆகிறது என்றும் சான்றிதழ் வழங்கக் கோரியும் மனு கொடுத்துள்ளார். இது போலத்தான் நேற்றும் மனு கொடுத்தார்.
இவரின் மனுக்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, அப்படியே வைத்துவிடுவேன். உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களின் குறையை தீர்க்க வேண்டிய மனுக்களில் மட்டுமே முழு கவனத்துடன் பார்த்து வருகிறேன். இதுபோன்ற தேவையற்ற, சுய விளம்பரத்திற்காக கொடுக்கும் மனுக்களில் கவனம் செலுத்துவதில்லை” என்றார்.