கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் சூர்யா தேவி என்பவர் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, தன் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொலியை வெளியிட்ட சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 14ஆம் தேதி போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரானது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் மீது அவதூறு பரப்பியதாக கூறி சூர்யா தேவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சூர்யா தேவி கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் காணொலி வெளியிட்டு கைது செய்யப்பட்டவர். தற்போது வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டது குறித்து அவதூறு கருத்து தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை வனிதா மீது புகார் அளித்த சூர்யா தேவி!