'ஜோக்கர்' பட புகழ் வகீன் ஃபீனிக்ஸ் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தற்போது கூறியுள்ளார்.
டிசி காமிக்ஸின் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜோக்கரின் முன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், வகீன் ஃபீனிக்ஸ் முன்னணி கதாபாத்திரமேற்று நடித்திருந்தார். ‘ஜோக்கர்’ படம் வெளியானபோதே வகீன் ஃபீனிக்ஸ் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் 2020 ஆஸ்கர் விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆஸ்கர் விருதை வென்ற வகீன் ஃபீனிக்ஸ், நாம் இந்த உலகில் நிகழும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என மனிதகுல முன்னேற்றம் குறித்து பேசி கண் கலங்கினார்.
இதைத்தொடர்ந்து, தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தற்போது வகீன் ஃபீனிக்ஸ் பகிர்ந்துள்ளார். "அதில் 15 வருடங்களுக்கு முன் என் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. நான் அதிகமாகப் பார்ட்டிகளில் கலந்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக மது குடிப்பேன். நான் ஒரு முட்டாள். சும்மா ஊரைச் சுற்றுவேன். முட்டாள் தனமாகக் கிளப்புகளுக்கு செல்வேன்.
பொதுமக்களுக்கு தேவையில்லா டிஸ்டபன்ஸை ஏற்படுத்துவேன். நானும், எனது செயல்பாடுகளும், ஒரு நாளும் இந்த உலகத்திற்கு உகந்தாக இருந்தது இல்லை. ஒரு நாள் இரவில் எனது கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் எனது காரின் பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் வெளியாகி இருந்தது.
இது எனக்கு தெரியாது. அப்போது நான் சிகரெட்டை பற்ற வைப்பதற்கு லைட்டரை ஆன் செய்ய முற்பட்டபோது, ஜெர்மன் பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் அங்கு வந்து அதைத் தடுத்து நிறுத்தினர். பின் சற்று நேரம் ஒய்வெடுங்கள் என்று கூறினார். ஹெர்சாக் மட்டும் அன்று வரமால் இருந்தால், நான் தனக்குத் தானே தீவைத்து கொண்டிருப்பேன்.
பின் சில நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்குப் பிறகு இப்போது வரை நான் மது அருந்தியது இல்லை. இப்போது என் வாழ்க்கையை ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. இது வாழ்வதற்காக, நான் எந்த போராட்டமும் மேற்கொள்ளவில்லை. ஏனென்றால் என் வாழ்க்கை முறையே இதுதான்" என்றார்.
இதையும் வாசிங்க: 'ஜோக்கர்' வகீன் பீனிக்ஸாக நடிக்க ஆசை - சந்தன் ராய் சன்யால்