'சலாம் பாம்பே', 'மான்சூன் வெட்டிங்' போன்ற புகழ்பெற்ற வெப்சீரிஸ்களை இயக்கியவர் மீரா நாயர். இவர் சமீபத்தில் இயக்கிய 'எ சூட்டபிள் பாய்' என்ற வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், கோயிலில் முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தக் காட்சி மத உணர்வுகளை புண்படுத்துவது போன்று அமைந்துள்ளதாகக் கூறி நெட்பிளிக்ஸ் நிர்வாகிகள்மீது மத்தியப் பிரதேச காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் துணைத் தலைவர் மோனிகா ஷர்கில், கொள்கைப் பிரிவு இயக்குனர் அம்பிகா குரானா ஆகியோர் மீது பாஜகவின் தேசிய இளைஞரணி செயலர் கௌரவத் திவாரி இந்தப் புகாரை அளித்துள்ளார். மேலும் இந்த வெப்சீரிஸ், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரியும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், "கோயிலில் இடம்பெற்ற முத்தக் காட்சி, மத உணர்வுகளை புண்படுத்துவது போல் அமைந்துள்ளதா என்பது குறித்து அலுவலர்களை ஆராய உத்தரவிட்டுள்ளேன். இது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது" என்றார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.