தமிழ் சினிமாவை போன்றே தெலுங்கிலும் கிராமக் கதைகளை மையப்படுத்தி நிறைய தொடர்கள் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் தெலுங்கில் மக்களின் மனதைக் கவர்ந்துவரும் தொடர் 'முட்யாலா முக்கு'. இந்தத் தொலைக்காட்சித் தொடரில் நடித்துவரும் நடிகை பார்கவி குடும்பப் பெண்கள் கொண்டாடும் நடிகையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை தொடருக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் பார்கவி (20), அனுஷா ரெட்டி (21) ஆகியோர் ஹைதராபாத் நோக்கி காரில் பயணம் செய்தனர்.
இவர்களுடன் கார் ஓட்டுநர் சக்ரி, வினய் குமார் ஆகியோரும் வந்தனர். நான்கு பேரும் ஒரே காரில் பயணித்த நிலையில் விகாராபாத் மாவட்டத்தை அடைந்தனர். அப்போது குடா என்னும் இடத்தில் கார் ஓட்டுநர்ர் சக்ரி முன்னால் சென்ற டிரக்கை முந்திச்செல்ல முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் படத்தில் நடப்பது போன்று நடந்த இந்த விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார். கார் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில் கிடந்தது.
![serial actress pargavi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/3030945_parghavi.jpg)
கார்மோதும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் ரத்தக் காயத்தில் கிடந்த மற்றொரு நடிகை அனுஷா ரெட்டியை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள உஷ்மானியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அனுஷா ரெட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் நடிகைகள் பார்கவி மற்றும் அனுஷா ரெட்டி உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.