2011ஆம் ஆண்டு முதல் ஹேச்.பி.ஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் புகழ்பெற்ற தொடர் "கேம் ஆஃப் த்ரோன்ஸ்". இத்தொடருக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். வெறித்தனமான என்றால் சும்மா இல்லை, இத்தொடரின் கடைசி எபிசோட் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ஆன்லைனில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெட்டிசன் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.
இத்தொடர் தற்போது மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளது. வருடாவருடம் தொலைக்காட்சிகளில் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விருதுக்கான பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் சிறந்த சீரிஸ், சிறந்த நடிகர் உள்ளிட்ட 32 பிரிவுகளின் கீழ் "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ஒரே வருடத்தில் அதிக பிரிவுகளில் எம்மி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தொடர் என்ற சாதனையை "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" படைத்துள்ளது. இதற்கு முன்வரை 161 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" சீரியஸ் 47 எம்மி விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.