தமிழ்நாட்டில் நிலவிவரும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமாவுக்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகளையும் ஜூன் 11ஆம் தேதி நிபந்தனைகளோடு தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதித்தது.
அரசு அனுமதியுடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கடுமையாகப் பரவிவந்த கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19 முதல் முழுமையான ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதன் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு, சினிமாவுக்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு பழைய நடைமுறையின்படி ஊரடங்கு உத்தரவு தளர்வு இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளதால், நான் அரசு அலுவலர்களுடன் பேசினேன்.
அப்பொழுது, ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதற்கு புதிய அனுமதி பெற வேண்டுமா என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், புதிய அனுமதி எதுவும் வாங்க வேண்டியது இருக்காது, பழைய அனுமதியை பின்பற்றலாம் என்று கூறினார்கள்.
ஆகையால் சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8ஆம் தேதி முதல் தொடங்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:'மோசமான சீரியல் பாக்காதீங்க, நியூஸ் சேனல்கள் பாருங்க' - அமைச்சர் சொல்லும் அறிவுரை