பிரபல பாப் பாடகி மடோனாவின் ஐம்பதாண்டு கால இசை வாழ்க்கை குறித்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தயாராக உள்ளது. இப்படத்தை ஆஸ்கர் விருது பெற்ற இணை எழுத்தாளர், டையப்லோ கோடியுடன் இணைந்து மடோனாவே இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க் நகரின் குடிசைப்பகுதியிலிருந்து தொடங்கி உலகின் மாபெரும் நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்த மடோனாவின் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, யுனிவர்சல் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படம் தொடங்கும் தேதி, பிற நடிகர்கள் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. "ஒரு கலைஞராக, இசைக்கலைஞராக, நடனக் கலைஞராக, இந்த உலகில் முன்னேறத் துடிக்கும் விந்தையான மனிதராக நான் மேற்கொண்ட பயணத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்" என இத்திரைப்படம் குறித்து மடோனா கூறியுள்ளார்.
மேலும், "இந்தப் படம் இசையை மையப்படுத்தியதாகவே இருக்கும். இசைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது. கலைதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
இங்கு சொல்லப்படாத எழுச்சியூட்டும் கதைகள் நிறைய உள்ளன. என்னைவிட இவற்றைச் சொல்வதற்கு இங்கு வேறு யார் சரியான நபர்? எனது வாழ்க்கை, குரல், பார்வை பற்றிய ரோலர் கோஸ்டர் சவாரிகளைப் பகிர்ந்துகொள்வதை நான் அவசியமானதாகக் கருதுகிறேன்" என்றும் மடோனா தெரிவித்துள்ளார்.
'எ லீக் ஆஃப் தெயர் ஓன்' திரைப்படத்தில் 1992ஆம் ஆண்டில் இணைந்து பணியாற்றிய மடோனாவும் பாஸ்கலும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : #HBD_Madonna: உங்களுக்கு வயசே ஆகல!