சென்னை:இந்தியா தொழில் கூட்டமைப்பு நடத்தும் தக்ஷின் தென்னிந்திய மீடியா மற்றும் பொழுதுபோக்கு கருத்தரங்கு ஏப்ரல் 9, 10 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன், லிஸி, சுஹாசினி, தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சுஹாசினி, “உலகம் முழுவதும் தென் இந்திய படங்களை பார்த்து கொண்டாடினார்கள். அது எப்படி என்பதை எடுத்து கூறுவது தான் இந்த கருத்தரங்கம். சினிமாத்துறையில் இப்பொழுது பெண்கள் தான் அதிகம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பெண்கள் தான் மொத்த பொறுப்பையும் ஏற்று கொண்டு பார்த்துகொள்கிறார்கள்.
சினிமாவை கற்றுக்கொள்ளும் தளமாக இந்த இரண்டு நாள் கருத்துரங்கு இருக்கும். தொடக்க விழாவில் ராஜமவுலி, மணிரத்னம், பகத்பாசில், ஜெயம்ரவி, சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். திரை உலகில் பெண்களின் பங்கு குறித்தும் இதில் பேசப்பட உள்ளது.
சினிமாவில் சோசியல் மீடியா குறித்தும் இதில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. சினிமாவில் வெற்றிகரமாக இயங்கும் முன்னணி நபர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்” என கூறுகின்றனர்.
தென்னிந்திய கலைஞர்களுக்கு அங்கீகராம் இல்லை: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு. "சர்வதேச அளவில் இந்திய சினிமா பற்றி பேசும்போது அதில் பணியாற்றிய தென்னிந்திய கலைஞர்கள் பற்றி பேசப்படுவதில்லை. சினிமா என்பது தென்னிந்திய சினிமா என்று சொல்லும் பொழுது மிகவும் புகழ் பெற்ற பாராட்டுக்குரிய நடிகர்கள் தென் இந்திய சினிமாவில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை யாரும் போற்றுவதில்லை உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை.
சிவாஜி கணேசன் முதல் கமலஹாசன், ரஜினிகாந்த் வரை தென் இந்திய சினிமாவில் தான் ஜொலிக்கிறார்கள். இவர்களை போல் யாருமே இல்லை. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுக்கிறோம் ஆனால் படம் ஓடுவதில்லை.
ஆனால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றியடைந்து நல்ல லாபத்தை ஈட்டுகிறது என்றார்.மேலும் கருத்தரங்கின் இறுதி நாளன்று இசை அமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு ஐகான் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது!