ரோர் (Roar), லாஸ்ட் ஃப்ரைடே நைட் (Last Friday Night), ஈ.டி (E.T), ஃபயர் வொர்க் (Fire work) உள்ளிட்ட பிரபல பாப் பாடல்களின் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாப் இசை உலகில் ராணியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கேட்டி பெர்ரி.
தற்போது ’நெவர் வோர்ன் ஒய்ட்’ (Never Worn White) எனும் தனது புதிய பாடலை வெளியிட்டுள்ள கேட்டி, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில், தன் நிறைமாத கர்ப்பிணி வயிறு தெரியும்படியாக பாடலின் இறுதியில் தோன்றி, தன் கர்ப்பம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனது புதிய பாடல் குறித்த அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கேட்டி, பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே தன் கர்ப்பம் குறித்தும் உறுதி செய்து ட்வீட் செய்துள்ளார்.
”இனியும் இந்தச் செய்தியை அடக்கிவைக்கத் தேவையில்லை. இனிமேலும் பெரிய பர்ஸ்களை போகும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று வயிறை மறைக்க வேண்டிய அவசியமில்லை” என கேலியான பதிவு ஒன்றைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
3 நிமிடங்கள் 50 விநாடிகள் நிரம்பிய நெவர் வோர்ன் ஒய்ட் பாடலில் வெளிர் நிற ஆடையில் அசரடிக்கும்படியான மலர் குவியலுக்கு மத்தியில் மற்றொரு காட்சியிலும் தோன்றி காண்போரை கேட்டி மகிழ்வித்துள்ளார்.
கேட்டியின் கர்ப்பம் குறித்த செய்தி, கண்களுக்கு குளிர்ச்சியான கேட்டி என இரட்டிப்பு சந்தோஷம் பொங்க அவரது ரசிகர்கள் இந்தப் பாடலை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: த பேட்மேனும் பேட்மேன் வாகனமும் - வெளியான ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள்