மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில் தனுஷூக்கு நிகராக நடிகர் லால் தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார். மஞ்சனத்தியின் கணவனாகவும்; ஏமராஜா தாத்தாவாகவும் நடிகர் லாலின் கதாபாத்திரத்தை அழகை செதுக்கி இருப்பார், இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இப்படத்தில் அவர் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை. இதுகுறித்துப் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், தனது சமூக வலைதளப்பக்கங்களில் அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்ணன் திரைப்படத்தில் ஏமராஜா கதாபாத்திரத்திற்கு ஏன் நீங்கள் சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். 'கர்ணன்' திரைப்படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் திருநெல்வேலியின் தமிழ் மிகவும் வித்தியாசமானது. மலையாளத்தில்கூட திருச்சூர் வட்டார மொழியில் ஒருவர் வசனம் பேசவேண்டுமென்றால்கூட, அதை ஒருவர் எனக்கு சொல்லிக்காட்டி அதன்படி முயற்சித்தால் தான், நான் அந்த வட்டார வழக்கை சரியாகப் பேசமுடியும்.
கர்ணன் படம் மொழி, கலாசாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் கொண்ட திரைப்படம். மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும். அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே, என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100 விழுக்காடு இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரது கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன். எனினும், படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
படம் வெளியான சில வாரங்களில் கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து மே 14ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 'கர்ணன்' திரைப்படம் வெளியானது. திரையரங்கம் சென்று பார்க்க முடியாத பலரும் தற்போது படத்தை அமேசான் தளத்தில் பார்த்து விட்டு, தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.