’பிக் பாஸ்-சீசன் 4’ நிகழ்ச்சி தொடங்கி நேற்றுடன் 50 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் வார இறுதி நாள்களில் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சீசனில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனக்குப் பிடித்த புத்தகங்களை கமல்ஹாசன் பரிந்துரைத்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ’கோபல்லபுரத்து மக்கள்’ புத்தகத்தை கமல்ஹாசன் பரிந்துரைத்தார்.
”தமிழ் இலக்கிய உலகின் தேர்ந்த கதை சொல்லி” என்றும், ”கரிசல் இலக்கியத்தின் முன்னோடி” என்றும் அழைக்கப்படும் கி.ராவின் கோபல்லபுரத்துமக்கள் புத்தகம், 1991ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
’கோபல்ல கிராமம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இந்தப் புத்தகம், பிரபல வார இதழில் வெளிவந்து, வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கிராவின் எழுத்து தனது சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டுப்புறக் கதைகளை படமாக்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றுவதற்கு காரணமான மாபெரும் வாழ்ந்துவரும் ஆளுமை என்றும் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார்.
கரிசல் நிலத்து மக்களின் வாழ்வியலை தனது எழுத்துகளில் பிரதிபலித்து, 98 வயதைக் கடந்து 99 வயதில் சமீபத்தில் அடியெடுத்து வைத்துள்ள கி.ரா, புதுச்சேரியில் லால்பேட்டை குடியிருப்பின் தற்போது வாழ்ந்து வருகிறார்.