லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபோன்டா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்த்திய, வெள்ளிக்கிழமை பரப்புரையில் அடுத்த 10 ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை குறைக்க கோரி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இந்த பரப்புரையில் 'ஜோக்கர்' படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜோகின் பீனிக்ஸ் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். இவர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரபல டிவி தயாரிப்பாளர் நார்மன் லியர் உள்ளிட்ட சிலரும் இந்தப் பரப்புரையில் பங்கேற்றனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சிட்டி ஹால் முன்னிலையில் பேரணியாக சென்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலிறுத்தி போராட்டம், பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஜேன் ஃபோன்டா ஐந்து முறை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 முறை வாஷிங்டன் நகரில் இந்த பரப்புரையை மேற்கொண்ட ஃபோன்டா, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதனை மேற்கொண்டார்.
பரப்புரையின்போது கூட்டத்தினரிடையே பேசிய ஃபோன்டா, நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்து, கோஷங்கள் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒன்றாகவே கைது செய்யப்பட்டோம். இந்த பரப்புரையின் காரணம் பருவநிலை நெருக்கடியின் அவசரம் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தவே.
கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதை பரப்புரை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. சமீப காலமாக காட்டு தீ, வறட்சி போன்ற இன்னல்கள் இங்கு நிகழ்ந்துள்ளன என்றார்.
இந்தப் பரப்புரையில் ஃபோன்டாவின் ஆதரவாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்த விழப்புணர்வு பாதகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்றிருக்கும் ஃபோன்டா, ஃபையர் ட்ரில் ஃப்ரைடே என்ற பெயரில் வெள்ளிக்கிழமைதோறும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான விழப்புணர்வு பேரணி நடத்தி வருகிறார்.