பர்ல் ஹார்பர், கேட்ச் மீ இஃப் யூ கேன், வேலன்டைன்ஸ் டே உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ஜெனிஃபர் கார்னர்.
48 வயது நிரம்பிய இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெரிய பூசணிக்காய் ஒன்றின் மத்தியில் செதுக்கப்பட்ட குட்டி பூசணிக்காய் ஒன்று இடம்பெற்றிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜெனிஃபர் தான் கருவுற்றிருப்பதை உணர்த்தும் வகையில் தான் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர்.
மேலும். ஜெனிபர் கார்னருக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள ’ஹாலோவின்’ பண்டிகையை ஒட்டி தான், இந்தப் புகைப்படத்தை தான் பகிர்ந்ததாககத் தெரிவித்து, தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜெனிஃபர்.
முன்னதாக குட்வில் ஹண்டிங், ஆர்கோ, பேட் மேன் Vs சூப்பர்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் பென் அஃப்ளிக்குடன் திருமணம் புரிந்து விவாகரத்து பெற்ற ஜெனிஃபருக்கு, ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ”நான் இதற்கு மேலும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என தனது ரசிகர்களுக்கு கேலியான பதில் ஒன்றை அவர் அளித்துள்ளார்.
தனது முன்னாள் கணவர் பென் அஃப்ளிக்குடன் பர்ல் ஹார்பர் படத்தில் ஜெனிஃபர் கார்னர் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.