காட்டில் உள்ள விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கும். ஆனால், அனைவருக்கும் உயிரியல் பூங்கா, வன விலங்குகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விலங்குகளை ரசிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிதான் ‘மேன் vs வைல்ட்’.
அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்கவரி தொலைக்காட்சி, இந்நிகழ்ச்சியை 2006ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்று, ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது குறித்து விளக்குகிறார்.
நிகழ்ச்சி தொடங்கப்பட்ட புதிதில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது. பிறகு தமிழ் மக்களுக்கு புரியும் வகையில், இந்தியாவில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விதவிதமான விலங்குகள், பாம்பு வகைகள், பறவைகள் என்று மக்களுக்கு புதிய புதிய விஷயங்களை இந்நிகழ்ச்சி காட்டியுள்ளது. மனிதனுக்கும், காட்டுக்கும் இடையே உள்ள புரிதலை, தத்ரூபமாக மேன் vs வைல்ட் நிகழ்ச்சி காண்பிப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கின்றனர்.
காட்டில் ஒருவர் மாட்டிக்கொண்டால், அவர் எப்படி தப்பிப்பது என்பது குறித்து ரசிகர்களுக்கு பியர் கிரில்ஸ் தெரிவிப்பார். இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரைத்தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பியர் கிரில்ஸ் உடன் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பைப் பார்ப்பதற்கு ரஜினி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதையும் படிங்க: 'Man vs Wild' மோடியைத் தொடர்ந்து பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த்