படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து படம் ரிலீசாகி வெற்றி நடைபோடும் வேளையிலும் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்பட்டுவரும் படம்தான் கர்ணன். பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களால் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக மாரி செல்வராஜ் உருவெடுத்துள்ளார்.
கண்டா வரச்சொல்லுங்க, உட்ராதீங்க யப்போ என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்திப் படத்திற்காகக் காத்திருந்த நிலையில், கர்ணன் ரிலீசாகும் அடுத்த நாளில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் படம் வெளியாகுமா, ஆகாதா என்னும் குழப்பத்தில் ரசிகர்கள் இருக்க தயாரிப்பாளர் தாணு படம் குறித்த தேதியில் கட்டாயமாக வரும், வெல்லும். வசூலை அள்ளும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். தற்போது கர்ணன் வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. கர்ணன் திரைப்படத்திற்குப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இன்று 50 விழுக்காடு இருக்கைகளுடனும் கர்ணன் வெற்றி திருவிழாவைக் கொண்டாடிவருகிறது. தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் பல கோடிகளை இப்படம் வசூலித்திருப்பதாக உள்வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் மாரி செல்வராஜுக்குத் தொலைபேசி மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
கர்ணன் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விவேக், "எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று ட்வீட் செய்துள்ளார். இதேபோன்று நடிகர் விஜய் சேதுபதியும், "மிகச் சிறப்பான திரைப்படம் கர்ணன். பார்க்கத் தவறாதீர்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
இதேபோன்று இயக்குநர் ஹலிதா ஷமீமும் கேரளத்தில் ரிஸ்க்தான். ரிஸ்க் எடுத்து கர்ணன் படம் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இப்படி உச்சகட்ட ஈர்ப்புத் தன்மையை ரசிகர்களிடையே பரவவிட்ட கர்ணன் திரைப்படம் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி சமூகத்தில் வேரூன்றி நிற்கும் சாதியத்தை கர்ணன் வாள் அறுத்து வீசும் என்பது திண்ணமே.