சென்னை: பிரபல ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் முழு நீள படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடிகை அக்ஷரா ஹாசன் நடிக்க, தனது முதல் முழு நீளத் திரைப்படத்தை தயாரிக்கிறது ட்ரெண்ட் லவுட் நிறுவனம்.
ஓரின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தமிழின் முதல் காமெடி தொடரான 'அமெரிக்க மாப்பிள்ளை' தொடரை இயக்கிய இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இதுகுறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறியதாவது:
பதின் பருவத்திலுள்ள அறிவார்ந்த இளம்பெண், கட்டுப்பாடுகள் மிக்க குடும்பத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்புகள்தான் இந்தப் படத்தின் கதை.
சமூகத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் தனது ஆசைகளை துறக்க முடியாமல், இரண்டையும் சமன்படுத்தி வாழ முயற்சிப்பது திரைக்கதையாக அமைந்துள்ளது.
படத்தின் கதை மட்டுமே பெண்களை மையப்படுத்தியதாக இல்லாமல், படத்தில் பணிபுரிபவர்களிலும் பெரும்பான்மையோர் பெண்களே உள்ளனர். பெண்களின் பார்வை படத்தில் அதிகமாக இருக்க வேண்டுமெனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரம் தற்காலத்திய நவநாகரிக உலகின் பெண் பிரஜையை மையப்படுத்தியது. எனவே அந்தக் கேரக்டரில் அக்ஷரா ஹாசன் நடிப்பது எனக்கு பெருமகிழ்ச்சி.
இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் அவர் நிச்சயம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவார். செப்டம்பர் 14ஆம் தேதி அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தென்னிந்திய டிஜிட்டல் துறையில் பெரும் நிறுவனமாக வளர்ந்துவருகிறது. தென்னிந்திய ஓடிடி, யூ-ட்யூப் தளங்களுக்கு ஒரிஜினல் தொடர்கள் தயாரித்துவருகிறது. சின்னத்திரையின் முதன்மைமிக்க பார்வையாளர்களாகப் பெண்கள் இருப்பதால் அவர்களின் ரசனைக்கேற்ப தற்போது முதல்முறையாக முழு நீள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நுங்கம்பாக்கம்'