சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார். இதையடுத்து, வினித் வரபிரசாத் இயக்கும் 'லிப்ட்' படத்தில் கவின் நடித்து வருகிறார். ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹேப்ஸி தயாரிக்கும் இப்படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் பிகில் படத்தில் சிங்க பெண்களில் ஒருவராக நடித்த காயத்ரி ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து நடிகை காயத்ரி ரெட்டி கூறுகையில், "இந்தப் படத்தின் புரோடக்சன் டீமில் இருந்து டெக்னிக்கல் டீம் வரைக்கும் அனைவருமே மிக நேர்த்தியாக செயல்படக் கூடியவர்கள்.
முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் எங்கள் டீமிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும். படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணருவீர்கள். மேலும் இந்தப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாபாத்திரமாகவே மாறியதை நன்றாக உணர்ந்தேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷ்னலாக இருக்கும். நடிக்கும் போதும் டப்பிங் பேசும் போதும் அதை நான் உணர்ந்தேன். 'லிப்ட்' படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியான பின் நல்ல 'லிப்ட்' கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்றார்.