பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாகத் திகழும் ஆமிர்கானின் மகள் ஐரா கான், மேடை நாடகம் மூலம் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஆமிர் கானின் மகள் ஐரா கான், மேடை நாடகங்கள் மீது தனக்கு ஈர்ப்பு அதிகம் என்கிறார். இதையடுத்து மேடை நாடகம் ஒன்றை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கிரேக்கத்தில் நடந்த சோகமான நிகழ்வு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு யூரிபிடிஸ் மீடியா என்ற பெயரில் மேடை நாடகத்தை இயக்கவுள்ளராம் ஐரா. இதற்கான பணிகளை தற்போது அவர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மேடை நாடகம் வரும் டிசம்பர் மாதம், நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த மேடை நாடகத்துக்கான ஒத்திகை மும்பையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தான் இயக்கும் நாடகத்தில் ஐரா ஏதேனும் கேரக்டரில் தோன்றவுள்ளாரா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆமிர்கானின் மகள் ஐரா கூறியதாவது,
மேடை நாடகத்தை தேர்வு செய்ததற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. எனக்கு அவை மிகவும் பிடிக்கும். பாரம்பரிய வடிவத்துடன் எதார்த்தமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் இருக்கும். இதில் உணர்ச்சிகளை வெளிகாட்டும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பார்வையாளர்களுக்கு கதை மீது அவநம்பிக்கை ஏற்படாது.
எனக்கு திகில் வகை கதைகள் பிடிக்கும். ஆனால் அனைத்து வகை கதைகளையும் கையாள விரும்புகிறேன் என்றார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ஹாட் டாப்பிக்காக வலம் வந்த ஐரா கான், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் அவதாரம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.