சென்னை: நடிகை மௌனிகாவின் வீட்டில் வேலை செய்யும் பெண், தன்னை திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகை மௌனிகா இல்லத்தில் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்தார். அங்கு ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஜோதிகா என்பவர் கார்த்திக் மீது காதல் வயப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜோதிகாவின் காதலை ஏற்க மறுத்த கார்த்திக் தனது வீட்டில் பெண் பார்ப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டிரைவர் பணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது இரண்டு மாதங்களாக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிவருகிறார்.
கார்த்திக்கை அடிக்கடி சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள ஜோதிகா வற்புறுத்தியும், மிரட்டியும் வந்ததாகக் சொல்லப்படுகிறது.
மேலும், தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி அவர் தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக காரத்திக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால் காவல் ஆணையர் அலுவலகத்தில், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி கார்த்திக்கை அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக்கின் பாட்டி மணிமேகலை, மௌனிகா தனது உறவினர்தான் என்றும், தனது பேரன் கார்த்திக்கை, ஜோதிகாவுக்கு திருமணம் செய்து தன்னோடு இருவரையும் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
திருமணம் செய்யா விட்டால் சினிமா பிரபலமான தன்னுடைய பலத்தை பயன்படுத்தி காவல் உயர் அலுவலர்களின் உதவியுடன் கார்த்திக்கை கைது செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் ஆஸ்தான ஹீரோயினும், அவரது மூன்றாவது மனைவியுமான மெளனிகா ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர் கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.