கன்னிராசி படத்தை இயக்கிய முத்துக்குமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து 'தர்மபிரபு' என்னும் படத்தை இயக்கியுள்ளார். முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராதாரவி, ராதா, மொட்டை ராஜேந்திரன், ஜனனி ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ராதாரவி -ராதாவும் இப்படத்தில் யோகி பாபுவுக்கு தாய், தந்தையாக நடித்துள்ளனர்.
விஜய், அஜித் படங்களில் காமெடியனாக நடித்த யோகி பாபு 'தர்மபிரபு' படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் 'தர்மபிரபு' படத்தின் டீசரை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக உள்ளது.
எமலோகத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக முத்துக்குமரன் இயக்கியுள்ளார். பாவம் செய்தவர்களை சொர்க்கலோகத்திலும், புண்ணியம் செய்தவர்களை நரகத்தில் அடைக்க வேண்டும் என்ற வசனமும் அந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
"வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் விதமாக அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னையா என்ற வசனங்கள் பார்ப்பவரை பரவசப்படுத்துகிறது. அக்கவுண்டில் பணம் போடுவதாக என்று சொல்லிவிட்டு ஆடைகளாக போட்டுக் கொண்டிருக்கிறாரா?" என்ற அரசியல் நய்யாண்டி வசனங்கள் சர்ச்சையை கிளப்பாமல் இருந்தால் நல்லது.