தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறியப்படும் யோகி பாபு நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். எளிமையான முறையில் வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'வணக்கம் அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த நாளைக் கொண்டாடுவேன். ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன்.
இந்த பிறந்தநாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக் கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்தளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் போதும், இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.
என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினருக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி.." என்று குறிப்பிட்டுள்ளார்.