நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது என புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தீர்த்தான்விடுதி கிராமத்தை சேர்ந்த மிடறு முருகதாஸ்(46) புகார் தெரிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே கவிதை ஆகியவற்றில் நாட்டம் கொண்டதால் அப்பகுதியில் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் இதுவரை மிடறு என்ற கவிதைத் தொகுப்பையும், தூக்குக் கூடை என்ற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் தன்னுடையது என்று கூறிய மிடறு முருகதாஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தொலைபேசியில் மிடறு முருகதாஸை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது, ”என்னுடைய ’தவிப்பு’ சிறுகதை க/பெ.ரணசிங்கம் என்ற திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. எனது கதையில் வரும் ராஜசேகரனுக்கும், ரணசிங்கத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. 2017ஆம் ஆண்டு கதை சொல்லி மாத இதழில் பிரசுரமாகியும், 2018ஆம் ஆண்டு வெளியான ’தூக்கு கூடை’ என்ற எனது சிறுகதை தொகுப்பில் 8ஆவது கதையாகவும் வருவதுதான் ’தவிப்பு’ சிறுகதை.
சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் வறுமையில் வாடும் ராஜசேகர் வெளிநாட்டிற்கு பிழைப்புதேடி செல்கிறார் . அவர் வேலைபார்க்கும் இடத்தில் இயந்திர கோளாறால் ரோப்பு அறுந்து விழுந்து இறந்துவிடுகிறார். அந்த உடலை அங்கே அடக்கம் செய்ய முயற்சி நடக்கிறது. ஆனால் என் கணவரை நான் பார்த்தே ஆகவேண்டும் என்று மனைவி பிடிவாதமாக இருக்கிறார். அதற்காக அவரின் உறவினர்கள், ஊராட்சிமன்ற தலைவர் , அதிகாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் படுகின்ற அவஸ்தையயைத்தான் எனது சிறுகதையில் சொல்லியிருக்கிறேன். இது ஒரு உண்மை சம்பவம். நான் எழுதிய கதையை மூடி மறைப்பதற்காக இயக்குநர் பல கோணங்களில் சிந்தித்திருக்கிறார். பல சம்பவங்களை சித்தரிக்கின்றார்.
ஆனால் அவை எல்லாம் போலி என்று பார்ப்பவர்களுக்கு நன்றாக புரிந்துவிடும். சாதாரண குடும்பத்தில் நடக்கும் எனது கதையை திரித்து இஸ்லாமியருக்கு எதிரான கதையாக உருவாக்கியதே இயக்குநரின் வெற்றியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம் பேசுவது, வெளியுறவுத்துறை அமைச்சர் காரை மறிப்பது , பிரதமருக்கு முன்னால் தற்கொலை செய்வேன் என்று சொல்வது. பிரதமர் அதே இடத்தில் இருந்து ரணசிங்கத்தின் உடலை வரவழைப்பது. இவை எல்லாம் என் கதையை மாற்றுவதற்கான சோடிப்பாக்கவே இருக்கிறது .
துபாய் அரசு சரியில்லை, இந்தியாவில் உள்ள அரசு அலுவலர்கள், காவல்துறை யாருமே சரியில்லாதவர்கள் என்று சித்தரிக்கும் இயக்குநர் மோடி மட்டுமே சிறந்தவர் என்று ஒரு கருத்தை படத்தில் காட்டுவதால் இந்த படம் யாருக்காக சோடிக்கப்பட்டது என்பதை நீங்கள்தான் செல்லவேண்டும். காப்பி ரைட்ஸ் சட்டத்தின் கீழ் இது மிகவும் தவறான செயல்” என்று மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகல்!