மரியான் - கடல்ராசா நான்
பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் மீனவராக நடித்திருந்த படம் ‘மரியான்’. இதில் இடம்பெற்ற ‘கடல்ராசா நான்’, ‘சோனாப்பரியா’ ஆகிய பாடல்கள் மீனவர்களின் கொண்டாட்டத்தையும், கடலின் பெருமையையும் பறைசாற்றுவதாக அமைந்திருக்கும்.
கடல்ராசா நான்
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல்ராசா நான்.. கடல்ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல்ராசா நான்.. மரியான் நான்
நெத்திலிக் கொழம்பு வாட.. எங்க நீரோடிக் காத்தெல்லாம் வீசுமய்யா..
தனுஷ் மிக இயல்பாக எழுதிய இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார்.
இதே படத்தில் கவிஞர் வாலி எழுதிய சோனாப்பரியா பாடலும் குறிப்பிடப்பட வேண்டியது. கடலின் பெருமையை சொன்னது அந்தப் பாடல்.
”ஓய! ஓயல! எந்த நாளும் ஓயல என்னைப் படைச்சவன் கொடுக்கும் கை ஓயல” என கடலை தெய்வமாக வணங்கும் மீனவன் பாடுவது போல் இந்த பாடல் அமைந்திருக்கும். கடல் ஓய்வின்றி கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது.
கடல் - ஏலே கீச்சான்
மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மீனவனாக இருந்து பின் கேங்ஸ்டராக மாறுவது போன்ற கதை ‘கடல்’. இதில் மதன் கார்க்கி எழுதிய ‘ஏலே கீச்சான்’ பாடல் மீனவர்களின் கொண்டாட்டத்தைக் கூறுகிறது.
ஏமா சீலா - நம்ம கடலம்மா அள்ளித் தாரா
ஆமா சீலா - அவ அலை வீசி சிரிக்குறா
ஏலே கீச்சான் வந்தாச்சு நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிச்சாஞ்சு
ஓ.. வாலே .. கொண்டாலே
கட்டுமரம் கொண்டாலே.. குண்டு மீனா அள்ளி வர கொண்டாலே..
நீர்ப்பறவை - நீரின் மகன் எந்தன் காதலன்
சீனு ராமசாமி இயத்தில் விஷ்னு மீனவராக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மீனவ மக்களின் துயரத்தை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. கடலுக்குச் சென்ற காதலன் திரும்பி வருவானா என்ற துயரத்தோடு காத்திருக்கும் காதலியின் உணர்வை சொல்லியது இதில் இடம்பெற்ற ‘பற பற’ பாடல்..
ஊரெங்கும் மழையும் இல்லை
வேறெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
கண்ணாளன் நிலைமை என்ன
கடலோடு பார்த்து சொல்ல
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
நீரின் மகன் எந்தன் காதலன் .. நீரின் கருணையில் வாழ்கிறான் - என வைரமுத்து இதன் வரிகளை எழுதியிருப்பார்.
சிட்டிசன் - மேற்கே விதைத்த சூரியனே
சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் மீனவராக நடித்திருந்த படம் ‘சிட்டிசன்’. இதில் வைரமுத்து வரிகளில் இடம்பெற்ற ‘மேற்கே விதைத்த சூரியனே’ பாடல், ஒடுக்கப்படும் மீனவ மக்களின் குரலாய் ஒலித்திருக்கும்.
குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை மீறும் பொது
புழுவும் புலி ஆகும்
மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்..
நிலாவே வா - கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
வெங்கடேஷ் இயக்கத்தில் சிலுவை என்ற மீனவர் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். காதலை மையக் கருவாகக் கொண்ட இப்படத்தில் வைரமுத்து எழுதிய ‘கடலம்மா கடலம்மா’ பாடல் ஒரு மீனவனும் அவன் காதலியும் பிரிந்திருப்பதை கடல் சார்ந்து ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும்.
என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு
நாக்கு மட்டும் வத்தி விட்டதே
ஒடம்பத்தான் கட்டி வச்ச உயிர் கயிறு
இப்ப ரொம்ப இத்து விட்டதே
என்னக் கொன்னாலும் மீனு திண்ணாலும்
நெஞ்சு வேகாது கண்ணம்மா
உன்ன காணாம உயிர் சேராம
என் கண்ணீரு தீருமா
கண்ணீரு கடலுக்குள் விழுந்தால் கடலுக்கு சொந்தமடி
கண்ணீரு முத்தா விளஞ்சா எடுத்துக்க நல்லபடி
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா...
கட்டுமரக்காரன் - கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன்
வாசு இயக்கத்தில் பிரபு மீனவராக நடித்திருந்த படம் ‘கட்டுமரக்காரன்’. காதலை மையக் கருவாகக் கொண்ட இத்திரைப்படத்தில், மீன் வலையில் சிக்கிதான் காதலனை அடைவாள் கதாநாயகி. இதை சித்தரிக்கும் வகையில் வாலி எழுதிய ‘கத்தும் கடல் உள்ளே’ பாடல் மிகவும் பிரபலம்.
மீன்விழ நானும்.. கன்னிவலை வீச
மான்விழ பார்த்தேன்.. கண்ணிரெண்டும் கூச
பூ நகை மாது.. பொங்கும் கடல் மேலே
மேனகை போலே.. மெல்ல எழுந்தாலே
எல்லாம் என் யோகம் என்பேன்..
பொன்னான நேரம் என்பேன்..
சிற்பத்தை வீட்டில்.. சேர்த்தேன் நான்
யாருக்கு சொந்தமென்று
யார் சொல்லக் கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான் - இப்படி கதாநாயகன் பாடுவது போல் இந்த வரிகள் அமைந்திருக்கும்...
சின்னவர் - அந்தியில வானம்
கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு மீனவராக நடித்திருந்த படம் ‘சின்னவர்’. மீனவ சமுதாயத்தை மையப்படுத்திய இக்கதை காதல், குரோதம், செண்டிமெண்ட் என நகரும். இதில் கங்கை அமரன் எழுதிய ‘அந்தியில வானம்’ பாடம் மிகவும் பிரபலம், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கூட இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது.
கட்டுமர தோனி போல
கட்டழகு உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ...
பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ...
கடல் மீன்கள் - தாலாட்டுதே வானம்
ரங்கராஜன் இயக்கத்தில் கமல்ஹாசன் மீனவராக நடித்த படம் ‘கடல் மீன்கள்’. அப்பா, மகன் என இரு வேடத்தில் கமல் நடித்து அசத்தியிருப்பார், இரு கதாபாத்திரமுமே கடலை மிகவும் நேசிப்பவர்களாக இருப்பார்கள். தந்தை கமலின் கடைசி ஆசை தன் உடலை கடலில் விட்டுச் செல்ல வேண்டும் என்பதாக இருக்கும்... இதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘தாலாட்டுதே வானம்’ பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்களில் ஒன்று..
நிலை நீரில் ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்
தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்....
படகோட்டி - தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்..
பிரகாஷ் ராவ் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மீனவராக நடித்த படம் ‘படகோட்டி’. இதில் கவிஞர் வாலி எழுதிய ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ மீனவ மக்களுக்கு மிகவும் பிடித்த பாடல். மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் துயரத்தையும் இப்பாடல் சித்தரிக்கிறது. மீனவ மக்களின் தேசிய கீதம் என இப்பாடல் கொண்டாடப்படுகிறது.
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் ......