"நேம் இஸ் பாண்ட்.... ஜேம்ஸ் பாண்ட்" என்ற வசனத்தைக் கேட்டாலே ஜேம்ஸ் பாண்ட ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். உலகில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையின் 25ஆவது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.
டேனியல் கிரேக் தொடர்ந்து 5ஆவது முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் இப்படம், தற்காலிகமாக "பாண்ட் 25" என்று அழைக்கப்படுகிறது. இப்படத்திற்குப் பிறகு தான் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கப்போவதில்லை என்று டேனியல் கிரேக் அறிவித்துள்ள நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
"பாண்ட் 25" திரைப்படத்தில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்று அறிவிக்கப்படவுள்ளதாக பாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளையர் அல்லாத ஒரு நடிகர் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளதாகப் பரவிய தகவல்கள் பாண்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான கேப்டன் மார்வல் திரைப்படத்தில் கேப்டன் மார்வலின் தோழியாக நடித்த லஷானா லின்ச் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே டேனியல் கிரேக்குக்கு ஏற்பட்ட காயம், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகியுள்ள "பாண்ட் 25" திரைப்படம், அடுத்த வருடம் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான விடை காண, அடுத்த வருடம் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.