மும்பை: சாக்லேட் பாய் ஹீரோ டூ வில்லனாக மாறியுள்ள விவேக் ஓபராய் தனது அடுத்த படத்தில் விங் கமாண்டர் அபிநந்தனின் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விவேக் ஓபராய் ஏராளமான காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாய் இமேஜில் வலம்வந்தார். பின்னர் மல்டி ஸ்டார் மற்றும் ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நிலையில், தல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் வில்லனாக தோன்றினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த 'வினய வித்ய ராம', மோகன்லால் நடித்த 'லுசிஃபர்' படத்திலும் வில்லனாக நடித்தார்.
இந்தப் படங்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான பி.எம். நரேந்திர மோடி படத்தில் நடித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் கதாபாத்திரத்தில் 'பாலகோட்: தி ட்ரூ ஸ்டாரி' என்று பாலகோட் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தில் விவேக் ஓபராய் நடிக்கவுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் 'பாலகோட்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படத்தை வெளியிட முடிவுசெய்துள்ளனராம்.