வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்து தயாரித்தும் உள்ளார் விஷ்ணு. இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ள விஷ்ணு, அதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமே தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் அறிமுக டீஸர் கரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியானது. இப்படத்தை 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். எமோஷனல் த்ரில்லர் பாணியிலான இக்கதை, பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு.

இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன்பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்ற 'மோகன் தாஸ்' படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. 'களவு' படத்தில் தன்னுடன் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையும் அமைக்கின்றனர். எடிட்டிங் கிருபாகரன்.
இதையும் படிங்க: 'என்னை ஏமாற்றி பணம் பறிக்க முயல்கிறார்கள்' - விமல் விளக்கம்