பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மகேஷ் பாபுவின் தயாரிப்புக்குழுவினர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வருகின்ற மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்குப் பின்னர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28ஆவது படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.
இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் விக்ரமின் மேனேஜர் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் வதந்தியே. இது ஒரு உறுதி செய்யப்படாத தகவல். பத்திரிகைகள் தயவு செய்து இது போன்ற செய்திகளை வெளியிடும்போது எங்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடவும் என்று கேட்டுக் கொள்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அஜித்துடன் திரையைப் பகிர்ந்ததால் உற்சாகம்'; மனம் திறந்த ஹூமா குரேஷி