சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரேநாளில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' படம் வெளியாகவுள்ளது.
கடந்த மாதம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழுவினர்கள் அறிவித்தனர்.
படத்தின் ரிலீசுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் வேளையில், 'சங்கத்தமிழன்' படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதே நாளில் வெளியிடவுள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதியின் ஒரு சில ஹிட் படங்கள், தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டு அங்கும் வரவேற்பைப் பெற்றது.
அத்துடன் தெலுங்கு சினிமாவிலும் தற்போது கவனம் செலுத்திவரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்துவருகிறார். இதனால் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
மேலும், சங்கத்தமிழன் படத்தில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இவர்கள் பல படங்களில் நடித்துள்ளனர். இதையெல்லாம் கருத்தில்கொண்டு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.

இதனிடையே 'சங்கத்தமிழன்' தெலுங்கு பதிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு 'விஜய் சேதுபதி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வாலு, ஸ்கெட்ச் படப் புகழ் விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.
தமிழ் ஹீரோக்களில் கார்த்தி, சூர்யா, விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்டோர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தங்களது படங்களை வெளியிட்டுவந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.