'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முகபாண்டியன். இவர் பிரபல நடிகர் விஜயகாந்தின் மகன் ஆவார். இவர் நடித்த முதல் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. இதனைத்தொடர்ந்து 'மதுரை வீரன்' படத்தில் நாயகனாக நடித்தார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'மதுரை வீரன்' படத்தில் விஜயகாந்த் மகனுக்காக நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம், ஜல்லிக்கட்டில் இருக்கும் சாதிய முரண்களையும் வெளிச்சம் காட்டிய படமாக வெளிவந்தது. சண்முக பாண்டியன் ஆறடி உயரம் என்றாலும் கதைக்கேற்றார்போல் நன்றாக நடித்திருந்தார். மதுரை வீரன் படத்திற்குப் பிறகு கதைத்தேர்வில் ஈடுபட்டு வந்த சண்முக பாண்டியன், இயக்குநர் சிவாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஜி.பூபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சண்முக பாண்டியன், ரோனிகா சிங், வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சண்முக பாண்டியன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்டிமென்ட், காதல், த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. விஜயகாந்த் அதிக படங்களில் காவல் அதிகாரியாக நடித்து வெற்றிபெற்றுள்ளார்.
எனவே தனது தந்தை கழற்றி வைத்த காக்கிச் சட்டையை உடுத்தக் காத்திருக்கும் சண்முகபாண்டியன், உள்ளூர் ரவுடிகள் முதல் பாகிஸ்தான் தீவிரவாகிகள் வரை எல்லோரையும் அடக்கி ஆளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.