நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் '800' எனும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இதற்கான முன்னோட்ட காட்சி இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகளும், கோரிக்கைகளும் குவியத் தொடங்கியுள்ளன.
முன்னோட்ட காட்சியில், முரளிதரன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி நடிகராக பொருந்தினாலும், அதில் வரும் சில காட்சிகள் உள் நோக்கத்துடன் வைக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பது, அவசர ஊர்தி சத்தம் போன்றவை எதற்கு கிரிக்கெட் வரலாறு படத்தில் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை நாட்டின் தேசியக் கொடியை, நடிப்புக்காக என்றாலும், நடிகர் விஜய் சேதுபதி தன் நெஞ்சில் ஏந்தியிருப்பது ஏற்க முடியாதது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக நம்மிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பேசிய போது, ” முத்தையா முரளிதரன் படம் பற்றிய அறிவிப்பு வந்த உடனே அதை எதிர்த்தோம்.
அவர் வெறும் கிரிக்கெட் வீரர் என்றால் யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், அவர் பல இடங்களில் அரசியல் பேசியுள்ளார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை எதிர்த்துள்ளார். இனப்படுகொலைக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்துள்ளார். எனவே, இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்கிறோமே தவிர அவரை நாங்கள் எதிர்க்கவில்லை.
இப்படத்தின் முன்னோட்டத்தில் குண்டு வெடிப்பது போல் காட்சி உள்ளது. எந்த கிரிக்கெட் விளையாட்டில் இது நடந்துள்ளது. இதன் மூலம், வெளியுலகத்திற்கு இலங்கையில் இனப்பாகுபாடு இல்லை; ஒரு தமிழரை நாங்கள் கிரிக்கெட் வீரராக ஏற்றுக் கொண்டாடுகிறோம் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
இதில் விளையாட்டோடு சேர்ந்து அரசியல் இருப்பதால் தான் நாங்கள் இதை எதிர்க்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்போம் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும்” - வைகோ