காதலர் தின (பிப்ரவரி 14) ஸ்பெஷலாக 'ஓ மை கடவுளே' படம் திரைக்குவருகிறது.
ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள படம் 'ஓ மை கடவுளே'.
இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இதில் படக்குழுவினர்கள் பங்கேற்று பேசினர்.
இதில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “ஒரு படம் உருவாகும்போது அதில் வேலை செய்யும் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டும். இந்தப் படம் அப்படியான படம்.
நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி என்ன படத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கேட்டார்கள். இது எங்கள் படம். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
நடிகை ரித்திகா சிங், “இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்.
சாரா மிகச்சிறந்த நண்பர். மிகவும் கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர். அவர் என்னிடம் சகோதரி போல் அன்பு செலுத்தினார்” எனக் கூறினார்.
அடுத்து பேசிய நடிகர் அசோக் செல்வன், ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். படம் குறித்து அவர் பேசுகையில், “அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக திரைக்கதை எழுதும் திறமை அவரிடம் இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்துக்கு பிறகு எங்களுடன் இணைந்துள்ளார். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுள்ளது. அதுக்கு விஜய் சேதுபதி அண்ணாகிட்ட கேட்டோம்.
![Oh My kadavulae movie](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5998746_196_5998746_1581134777092.png)
நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர், கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு. எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார்” என்றார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறும்போது, “இந்த மேடை எனது நெடு நாள் கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகுதான் நம்பினார்கள். இப்போது வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளார்கள்.
ரித்திகா சிங் இறுதிசுற்று படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகை. அவர் நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்” என்றார்.