சென்னை: தமிழில் பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதிபதி தனது இரண்டாவது தெலுங்கு படத்தின் படக்குழுவுடன் இணைந்துள்ளார்.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்ற வரலாற்றுப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
'உப்பென்னா' என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் விஜய் சேதுபதி இது வரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷவ தேவ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
முன்னதாக, இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், படக்குழுவினர் அதனை மறுத்தனர். இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி 'உப்பென்னா' குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ஆர்யா, 100%லவ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுகுமார் கதை, திரைக்கதை எழுதுகிறார். புதுமுக இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்குகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் தமிழில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற கேரக்டரில் பெண்ணாக தோன்றி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. இந்தப் படத்துக்காக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.