சென்னை: இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கும் கன்னி மாடம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர்கள் விஜய் சேதுபதி, பரத், இயக்குநர் விக்ரமன் என பிரபலங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தனர்.
வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்கள் நடிக்க கன்னி மாடம் என்ற படம் மூலம் திரைப்படங்களில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறை தன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும்.
நாம் சோர்வாகும்போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும், பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்படத்தின் பாடல்களை கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும்போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. 'கன்னி மாடம்' வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குநர் விக்ரமன் பேசியதாவது:
சமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவைப்பது என்பது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலான காரியமாக இருக்கிறது. 'கன்னி மாடம்' தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரும் வெற்றி பெறும் என்றார்.
நடிகர் பரத் பேசும்போது:
நானும் போஸ் வெங்கட்டும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது எப்போதும் அவர் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களை பொறுத்தவரை, அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். 'கன்னி மாடம்' தரமான படைப்பாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
தமிழ் சினிமாவில் வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்ஷா டிரைவர்கள் பற்றி படம் வருகிறது. கடந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் ரிக்ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர். ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்.
போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள் மீது உள்ள அன்பில், அவர்களை பற்றி அழகாக படம் எடுத்துள்ளார். நல்ல கருத்துகள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது,
முதல் முறை போஸ் வெங்கட், ஃபோனில் இந்தக் கதை பற்றி சொன்னபோதே, என்னை ஈர்த்துவிட்டது. உடனடியாக நான் பாடல் வரிகளை எழுத ஆரம்பித்தேன். மறு நாள் எனக்கு முழு கதையையும் கூறினார். தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பாக இருக்குமென தோன்றியது. போஸ் வெங்கட் அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் மிகச்சிறந்த இயக்குநராக வலம் வருவார் என்று பேசினார்.
நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது:
நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும்.
தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப் படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று பேசினார்.