மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லாபம்'. இத்திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (செப்டம்பர் 3) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசுகையில், "நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் வாய்ப்புக்காக ஜனநாதனின் வீட்டுக் கதைவைத் தட்டியது முதல் அவரைத் தெரியும்.
அவரை இழந்த நிலையில் ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன். தந்தை, மகன் உறவுபோல அவர் இருக்கும்போது அவரது அருமை புரியவில்லை. அவர் மரணம் மூலம் காலம் கேவலமானது என உணர்கிறேன். தெரிந்திருந்தால் அவர்கூட நிறைய நேரம் செலவு செய்திருப்பேன்.
எஸ்.பி. ஜனநாதன் ஒரு கதையைத் தொடங்குவார், இடையிலேயே கதையில் பல மாற்றங்களைச் செய்வார். இதுதான் கிளைமேக்ஸ், வசனம் என்று அவரது படத்தில் முன்கூட்டியே கணிக்க முடியாதவாறு மாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பார். இந்தப் படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. என் அப்பா, பாட்டன் செய்த புண்ணியத்தால் இப்படத்தில் நடித்துள்ளேன்.
திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்துபவை. மக்கள் சிந்திக்க வேண்டியதை திரைப்படங்கள் கற்றுத் தருகின்றன. எனது பிள்ளைகளுக்கும் சினிமா மூலமே பாடம் நடத்துகிறேன். ஏனென்றால் இதுதான் என் தொழில்.
எந்தப் படத்தையும் குறை கூறாமல் அதிலுள்ள யோசனைகளைத் தெரிந்துகொள்ளுமாறு, எனது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவேன். தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ளவே மற்றொருவர் படைப்பை ஒருவர் குறை கூறுகிறார்.
நான் ஒரு முட்டாள், இந்தப் படம் குறித்து அதிகமாக என்னால் பேச முடியாது. திரையரங்குகள் திறக்க அனுமதியளித்த தமிழ்நாடு அரசுக்கு மிக்க நன்றி. சினிமா தொழில் மூலம் பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன" எனக் கூறியுள்ளார்.