சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அம்மனுவில், "மருத்துவப் பரிசோதனைக்காக மைசூரு செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். திரைத் துறையில் அவரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தேன்.
ஆனால், எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுபடுத்திப் பேசியதுடன், என்னையும் எனது சாதியையும் பற்றி தவறாகப் பேசினார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாகத் தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இப்படி இருக்கையில் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பினர். அவர்கள் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்துசெய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், "பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இங்கு அவதூறு வழக்குத் தொடர முடியாது. இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் சமரசம் செய்துகொண்ட நிலையில், அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்து, அழைப்பாணையை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நாளை மறுதினம் (ஜனவரி 5) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காலங்களில் அவள் வசந்தம் படப்பிடிப்பு தொடக்கம்