நடிகர் விஜய் 'சர்கார்' படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்காததால் விஜய்-63 என்று தற்காலிகமாக அழைக்கின்றனர். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா மற்றும் பிற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகிறது.
விஜய் 63 படத்தில் நடித்து முடிக்கும் முன்னரே தனது அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குநரை விஜய் தேர்ந்தெடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்-64 படத்தை இயக்குநர் மோகன்ராஜா இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் இயக்குநர் ஒருவருக்கு நடிகர் விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார். 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர்தான் விஜய் 64 படத்தை இயக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். அந்தக் கதை பிடித்துபோகவே தான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜிற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியறிந்த விஜய் ரசிகர்கள் ரஜினியை கடைப்பிடிக்கும் 'தளபதி' விஜய்யை பாராட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.