சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பெஞ்சமின். 'திருப்பாச்சி', போன்ற பல திரைப்படங்களில் நடித்த இவருக்கு கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மூன்று நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அங்கு அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்குச் சென்றார்.
இதனிடையே சிகிச்சைக்காக திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவிக் கோரி வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைதொடர்ந்து அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள், நண்பர்கள் உதவி செய்தனர். இதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து சேலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். சிகிச்சைக்காக தனக்கு உதவிய அனைவருக்கும் பெஞ்சமின் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உங்களால் நான் இன்று உயிர் பிழைத்து இருக்கிறேன். எனக்கு சிகிச்சை அளித்த தலைமை மருத்துவர் கண்ணனுக்கும், என் வகுப்புத் தோழன் முத்துசாமி, டாக்டர். மௌலிஸ், என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட செவிலியர்களுக்கும் மிக்க நன்றி.
எனது சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில் சேலத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். எனக்காக வேண்டிக் கொண்ட உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்கள், என் அன்பு நண்பன் சூப்பர் சிங்கர் வின்னர் மூக்குத்தி முருகன், சேலம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் பார்த்திபன், குழுவினர் ஆகியோருக்கு நன்றிகள். எனக்கு உயிர் பிச்சை அளித்த கடவுளுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது- உரிமையாளர்கள் திட்டவட்டம்!